கண்ணீர் அஞ்சலி..

அன்னை மடியில் : 03:07:1986                                                                                                                                                                ஆண்டவன் அடியில் : 08:01:2019

  அமரர் குணரட்ணம் குகதாசன் 

 
மாசாரில் பிறந்தவனே மாசற்ற மனத்தவனே 
குணமதில் இரத்தினமாம் குணரத்தினம் எனும் 
நல்லோன்மடியில் 
தாயும் மகிழ்ந்திருக்க சுற்றமும் கொண்டாட
 முருகனின் நாமம் கொண்ட முதல் முத்தாய் 
உதித்தவனே 
குகனுக்கு தாசனாவாய் என்றெண்ணி குகதாசன் 
எனப்பெயர் 
சூட்டி நால்முத்தில் நல்வித்தாய் நல்லபடி 
 வாழ்ந்திருக்க 
இடை நடுவில் வந்த காலன் ஏன் உன்னை எடுத்தான் நண்பா?


 கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க 
எழுந்து வர மாட்டாயா ? எடே நண்பா என்றழைக்க மாட்டாயா? 
தமிழும் தடுமாறுதடா தங்கமே 
காகிதத்தில் கவிதையாய் உனை எழுத
கண்ணீர் தான் சொரியுதடா. 
 
 
 பால்ய வயதில் நீ புற்றளை கல்வித்தாயிடம் வந்த நேரம் 
தொடக்கம் இன்றுவரை நாம் செய்த குறும்புகள் குழப்படிகள் 
எல்லாம் கண்முன்னே வந்து கண்ணீரை சொரிகிறதே
 PEC இல் படித்தபோதிலும் அதற்கு பிறகும் நாங்கள் 
ஒன்றாக நீந்திய கேணிகளும் குளங்களும் 
உனக்காய் கலங்கி நிற்கிறது நண்பா 
திருட்டுதனமாய் இளநீர் குடித்து ஆட்டம் போட்ட 
தென்னைகள் எல்லாம் சோகத்தில் தலை கவிழ்ந்திருக்கிறது நண்பா. 
விருந்தோம்பலுக்கும் நட்பு பாராட்டுவதற்கும் 
உனக்கு பதிலாக இனி நாமெங்கே போவோம்? 


 நோயோடு வந்திருந்தால் 
 நோகாமல் பார்த்திருப்போம்
 பாயோடு படுத்திருந்தால் 
 பகலிரவாய் பார்த்திருப்போம்
 யாருக்கும் பாரமாய் கூடாதென்றா 
நடுவழியில் போனாய் நண்பா? 
சுவியென்று அன்போடு நீயழைக்கும் 
உன் மனைவியிங்கே தவியாய் தவிக்கிறாளே 
எழுந்தொருக்கால் நீ வந்து என்னடி 
ஆனதென்று ஆறுதல் சொல்லேன் நண்பா. 


 சின்ன வயதிலேயே சிறப்பாக வாழ்ந்தாயென்றோ 
முப்பது வயதிலேயே முதலாளி 
ஆனாயென்றோ காணப்பொறுக்காத கொடுங் 
காலன் காவெடுத்து போனானோ 
 சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயதடா 
குழறியழ வைத்துவிட்டு குகன் எங்கே போனாயடா? 


 அன்று முதல் இன்று வரை - என்றும் 
உன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும் 
துன்முகத்தை நாடியதில்லை - இன்று 
மூடிவைத்து உன்முகத்தை நாங்கள் 
கூடிவந்து கொண்டு செல்லும் 
கொடிய நிலை ஏன் நண்பா...? 
 
 
 உனை விரும்பாதோர் யாருமில்லை 
வெறுப்போர் என்று எவருமில்லை 
நட்புக்கு இலக்கணம் நீ 
வீட்டுக்கு மூத்த பிள்ளை 
மூன்று தம்பி துணையிருக்க 
மன்னவன் போல் வாழாமல் 
இடை நடுவே ஓடிவிட்டாய் 
எங்கே போனாலும் நண்பர்களுக்கு சொல்லிப்போவாயே நண்பா 
இங்கு மட்டும் தனியே ஏனடா விட்டுப்போனாய்? 


நீ தொட்ட பொருளெல்லாம்
உன் நினைவை சொல்லுதடா 
நீ சொன்ன கதை எல்லாம் 
 கொல்லாமல் கொல்லுதடா 
உன் கைகள் பற்றிய தோள்களில் 
நட்பின் ஸ்பரிசம் இன்னும் மாறவில்லை 
சொத்தென சேர்த்த சொந்தங்கள் கதிகலங்க
 அத்தனையும் விட்டதென்ன அரைவாழ்வை 
தொட்டதென்ன...? 


 பெற்றாரும் உற்றாரும் பேதலித்துக்கிடக்கின்றோம் 
ஒரு தடவை கண்திறந்து பாரடா 
 குணத்தின் சிகரமே குகனே 
 மீண்டும் வாடா நண்பா 
பேசி சிரிக்க இன்னும் 
ஏராளம் கதை இருக்கு.
பாதியில் எம்மை விட்டு போகவோ இப்படி 
பாசமாய் பழகினாய் நண்பா. 
உன்னை இழந்துவிட்டோம் என்பதை 
இன்னமும் நம்ப மறுக்கிறது மனசு நண்பா. 
நல்லவனே குகனே உன் ஆன்மா 
 எல்லாம் வல்ல சிவனை அடையட்டும்.
     
      நண்பா உன் சாந்தி என்றும் நலமாக அமையட்டும் சாந்தி சாந்தி சாந்தி.
                                                                                                                   

உன் பிரிவால் துயரற்றிக்கும்

2002 O/L நண்பர்கள் 

யா/புற்றளை மகா வித்தியாலயம்

பருத்தித்துறை.

0